லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜவஹர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
ஜனநாயகத்தின் மன்னர்களான மக்கள் தரும் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகமானது துரிதமாகச் செயல்பட்டு அரசின் சேவைகளை எளியமுறையிலும் விரைவாகவும் மக்களுக்குச் சென்று சேர்க்கவேண்டும். இன்றைய நிலை அப்படியில்லை. பல்வேறு காரணங்களால், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லஞ்சம் கொடுத்துத்தான் அரசு சேவைகளைப் பெறமுடியும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதன் பின்புலத்தில் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக அறிகிறோம்.
நேர்மையாகச் செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள்கூட நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை அரசு சேவைகளில் தொடங்கி தொழிற்சாலை துவங்க, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவது வரையிலான அனைத்து அரசு சேவைகளும் குறித்த காலத்திற்குள் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகிவிட்டது.
இந்த நிலையை மாற்றி, விரைவான-தரமான அரசு சேவைகளைக் பெறுவதற்கு வழிவகுக்கும் "சேவை பெறும் உரிமைச் சட்டத்தைத் (Right to Services Act) தமிழகத்தில் கொண்டுவரக்கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக இம்மனுவினைச் சமர்ப்பிக்கிறோம். என அம்மனுவில் கூறிப்பிடப்பட்டுள்ளது.