சாத்தான்குளத்தில் வியாபாரி வீட்டில் ரூ.1.48 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மற்றொரு வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புது வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவன் (வயது 70). இவர் மகன் மற்றும் குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள வீட்டுக்கு விழா நாட்கள் போன்ற தினங்களில் வந்து செல்வது வழக்கம். சாத்தான்குளத்தில் உள்ள வீட்டின் அருகில் உள்ள காலிமனையில் புதிதாக வீடுகட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் ஸ்ரீராமன் (67) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மற்றும் குடும்பத்தினர் நாகர்கோவிலில் தொழில் செய்து வருகின்றனர். இதனால் ஸ்ரீராமன், சமீபத்தில் நாகர்கோவில் சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை சதாசிவன் மற்றும் ஸ்ரீராமன் ஆகிய இருவரது வீடுகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ, ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர் அருணாசலம் தலைமையிலான குழுவினர் வந்து தடயங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் பார்த்தபோது, சதாசிவன் வீடு கட்டுமான பணிக்காக வீட்டின் மாடியில் பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுபோல் ஸ்ரீராமன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் மற்றும் நகை ஏதும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
சதாசிவன், ஸ்ரீராமன் ஆகியோர் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.