• vilasalnews@gmail.com

71 பயனாளிகளுக்கு ரூ.33,14,761 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணத்தில்  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 71 பயனாளிகளுக்கு ரூ.33,14,761 நலத்திட்ட உதவிகளை இன்று (19.03.2022) வழங்கினார். 

பாரம்பரிய மீனவர்களது நாட்டுப்படகுகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், வீரபாண்டியபட்டிணம் மீனவ கிராமத்தை சேர்ந்த 18 பயனாளிகள், கொம்புதுறை மீனவ கிராமத்தை சேர்ந்த 17 பயனாளிகள், தூத்துக்குடியை சேர்ந்த 33 பயனாளிகள் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு ரூ.27,77,261/- மதிப்பிலும், கடலில் மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு தினப்படி ரூ.250/- வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், மங்களூர் கடல் பகுதியில் கடலில் காணாமல் போன மீனவர் ரெனின்  மனைவி ராணிக்கு உதவித்தொகை (01.02.2022 முதல் 31.03.2022 வரை) ரூ.15,000/-, கொம்புதுறை கடல் பகுதியில் காணாமல் போன மீனவர் பெலவேந்திரனின் மனைவி மேரிக்கு உதவித்தொகை (01.02.2022 முதல் 31.03.2022 வரை) ரூ.22,500/-, மீனவர் விபத்துக்குழு காப்பீடு திட்டத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மீனவர்களுக்கான இலவச காப்பீடு திட்டத்தின்கீழ் சிலுவைப்பட்டி பகுதியில் இடி மின்னல் தாக்கி இறந்த மீனவர் மாரியப்பன்  வாரிசுதாரர்  ஆலோசனை மரியாளுக்கு காப்புறுதி தொகை ரூ.5,00,000/- என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.33,14,761/- வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீனவர்களின் நலனை காக்கின்ற வகையில் மீன்வளம் , மீனவர் நலன் என்று மாற்றி மீனவர்களின் நலன் மீது அக்கரை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மீன் தடைக்காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த நிதியுதவியை ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார்கள். தூண்டில் வளைவுகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாக்டர் கலைஞர் அவர்கள் மண்ணெண்னைக்கு ரூ.25 விலையில் மீனவர்களுக்காக வழங்கி திட்டத்தினை செயல்படுத்தினார்கள். மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து தரப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மீன்வளம், மீனவர்நலன்)  அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், நிர்வாக குழு உறுப்பினர் டாப்கோபெட் / வீரபாண்டியபட்டணம் மீனவர் கூட்டுறவு சங்கம் ஜெபமாலை, துறைமுக கமிட்டி தலைவர் பேல், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோமதிராஜேந்திரன், வீரபாண்டியபட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் எல்லைமுத்து, புன்னக்காயல் ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபியா மற்றும் முக்கியப்பிரமுகர்கள்  எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், ஜெயக்குமார் ரூபன், துறைமுக கமிட்டி முன்னாள் தலைவர் எடிசன் பர்னாந்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி சீர்மிகு நகர திட்டம் - மாநகர அளவிலான ஆலோசனை மன்ற கூட்டம்!

முன்விரோத தகராறு - ஓட்டப்பிடாரம் அருகே அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

  • Share on