சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சண்முகநகரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் முருகன் (65) என்பவர் 18.03.2022 அன்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வந்து பார்க்கும்போது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3¼ சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 20,000/- பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் மகேஷ் (34) மற்றும் வெள்ளூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்த சேது மகன் ராமச்சந்திரன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி முருகன் என்பவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து மகேஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.