பனை ஏறும் கருவி செயல் விளக்கம், அக்கருவியினை பயனாளிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (20.03.2022) அந்தோணியார் புறத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற பனை ஏறும் கருவி செயல் விளக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் பார்வையிட்டு அக்கருவியினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்:
புதிய பனைகள் வளர்ப்பு, இருக்கக்கூடிய பனை மரங்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகளுக்கான பல்வேறு திட்டங்களை நேற்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இப்போது இருக்கக்கூடிய சூழலில் பனை ஏறுவதற்கே தயக்கம் இருக்கக்கூடிய சூழல் உள்ளது, ஏனென்றால் அதில் இருக்கக்கூடிய ஆபத்தை நினைத்து பல படித்த இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வர தயக்கம் காட்டுகின்ற சூழல் இருக்கிறது.
எனவே, இந்த பனையேறும் தொழிலை பாதுகாப்பாக செய்வதற்கு, தென்னை மரங்கள் ஏறுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் கூடுதல் இணைப்புகளை கொண்டு பனைமரங்களும் ஏறுவதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கருவியின் செயல் விளக்கம் மற்றும் பயனாளிகளுக்கு அதனை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை துணை இயக்குனர்கள், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.