எட்டையாபுரம் M.கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் ஜெயமுருகன் (43). இவரது உறவினரான தங்கசாமி என்பவர் அயன்வடமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது பனங்காட்டை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜெயமுருகன் நேற்று (18.03.2022) மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன்வடமலாபுரம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இருந்த தங்கச்சாமிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அங்கு சென்ற போது அங்கு வந்த கருப்பசாமியின் உறவினரான தாப்பாத்தி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயம் (எ) ஜெயராஜ் (64) மற்றும் அவரது மகன்களான சுரேஷ்குமார் (29), ஹைகோர்ட் மகாராஜா (35), இளையராஜா (25) மற்றும் ரவி (22) ஆகியோர் சேர்ந்து தங்கச்சாமியிடம் பனங்காட்டை நீ எப்படி குத்தகைக்கு எடுக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஜெயமுருகன் அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் என்பவர் ஜெயமுருகனை அரிவாளால் தாக்கியும், அவருடன் இருந்த மற்றவர்கள் கை மற்றும் கால்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயமுருகன் இன்று (19.03.2022) அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தார்.
மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.