தூத்துக்குடியில் வருகிற 19ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து, வேலைதேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 19.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர்கள் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சிறப்புரையாற்ற உள்ளார்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி B.E., Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.