தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா சிவராத்திரி விழா "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகளுடன் விடிய விடிய கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
தென்தமிழகத்தில் குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் இங்கு மட்டுமே எழுந்தருளியுள்ளது சிறப்பான அம்சமாகும். குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா நேற்று (செவ்வாய்கிழமை) காலை ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் துவங்கியது.
காலை 10மணிக்கு கணபதி, -நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்கியது.
அதனைத்தொடர்ந்து, மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹா பூஜை-தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், பூர்ணாகுதி, அபிஷேக, அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 10மணிக்கு ''பெண்களுக்கு ஆண்கள் ஹீரோவா..? இல்லை ஜீரோவா..?'' என்ற தலைப்பில் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் என மஹா சிவராத்திரி விழா "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தமிழ்மறை வழிபாடுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 12மணிக்கு மஹா அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணமும், அதன்பின்பு இன்று (புதன்கிழமை) அதிகாலை 2மணிக்கு சதுர்வேதபாராயணமும், அதிகாலை 4மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைந்தது.
மஹா சிவராத்திரி விழாவில் சிவபக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அரசின் வழிகாட்டுதல்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இறைவழிபாடு செய்தனர்.
விழாவில் பங்கேற்று ''ஓம் நமச்சிவாய'' ஸ்லோகம் அதிகளவில் எழுதியவர்களுக்கு "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் சிறப்பு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.