தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூரில் நடைபெற்ற வேல் யாத்திரை இறுதி நிகழ்வில் ம.பி முதல்வர். சிவராஜ்சிங்சவுகான் கருப்பர் கூட்டத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.
கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியினர் வேல் பூஜை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வந்தது.
டிசம்பர் 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்திவிட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுவதாக கூறியிருந்தனர். பின்னர் அனுமதி தராத காரணத்தினால் 7ஆம் தேதி என அறிவிக்கபட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று(07.12.2020) திருச்செந்தூரில் உள்ள கேடிஎம் மண்டபத்தில் சுமார் 200 பேர்களுடன் வேல் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது.
அதில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் மற்றும் தமிழக மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் நேற்றைய தினமே அங்குள்ள விடுதி, திருமண மண்டபம் என ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன் , மாநில தலைவர் எல். முருகன், தேசிய மகளிர் அணி தலைவி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேசிய பின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.
அவர் பேசிய போது ‘’என்னுடைய வாழ்நாளிலேயே மிகவும் முக்கியமான நாள் இன்றைய நாள் ஆம் பகவான் முருகனின் மண்ணுக்கு வந்திருக்கிறேன். இங்கே அவர் முருகன் என்கிற பெயரில் அருள் பாலித்து வருவதுபோல நாடுமுழுவதிலும் அவர் கார்த்திக்கேயன் என்கிற பெயரில் நாட்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த மண் கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பாரதி ஆகியோரை தந்த மாவட்டம். இந்த மண்ணில் கால் வைத்ததற்கு நான் மிகவும் பாக்கியம் செய்தவனாக இருக்கிறேன். நம்முடைய கடவுளை அவமானப்படுத்தப்பட்டதை எதிர்த்து நம் மாநில தலைவர் முருகன் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
அவரை பாராட்டுவதற்காகவும், நன்றியை தெரிவிப்பதற்காகவும் இங்கே வந்திருக்கிறேன். முருகன் பெருமான் நம்மை காக்க எப்படி அசூரரை அழித்தாரோ அது போல் இந்த வேல் யாத்திரையானது தமிழகத்தில் இருக்கிற அசூர சக்திகளை, நாத்திக சக்திகளை, தேசவிரோத சக்திகளை அழிக்க வந்துள்ளது. நம்முடைய கடவுள் முருகனை அவமான படுத்திய கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கிறேன். நீங்கள் மிகவும் எல்லை மீறிகீறிர்கள். அப்படி எல்லை மீறினால் தமிழக மக்களும் பாரத நாட்டு மக்களும் உங்களை தண்டிவிடுவார்கள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
கருப்பர் கூட்டத்தை மீண்டும் எச்சரிகிறேன். முருகனுடைய பக்தர்களாக, நம்முடைய பக்தி மீது, நம்பிக்கையின் மீது, நம் கலாச்சாரத்தின் மீது நம் பண்பாட்டின் மீது காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டால் உங்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வருவார்கள், அதற்காக செயல்படுவோம் என்பதை நான் மீண்டும் ஒரு முறை எச்சரித்து கொள்கிறேன்.
இந்த நாட்டில் ஆன்மிகம் இருக்கிறதால் மனிதன் நல்வழியை நோக்கி பயணம் மேற்கொள்ள முடுகிறது. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் காலையில் கந்த சஷ்டி பாடல் பாடப்படுகிறது. தமிழகத்திலே பழனி முருகன், திருச்செந்தூர் முருகன் அருள் பெறாமல் தமிழக மக்கள் யாராவது இருக்கிறார்களா?
ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ள சிங்கப்பூரிலே, மலேசியாவிலே பகவான் முருகனுக்கு பிரம்மாண்டமான ஆலயங்கள் இருக்கிறது. கருப்பர் கூட்ட முட்டாள் கூட்டத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எங்கள் ஆன்மிக பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு இடையூறு செய்வதற்காக யாரேனும் முட்டாள் கூட்டம் திரியுமானால் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம்.
இந்த நாத்திக சக்திகளுக்கு இந்துவிரோத சக்திகளுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய முயற்சிகளை கைவிடுங்கள். நாட்டின் கலாசாரத்தை பின்பற்றுகிற கட்சி பா.ஜ.க. அனைவரோடும் சேர்ந்து அனைவருக்குமான முன்னேற்றம் என்கிற கோஷத்தோடு பிரதமர் மோடி நாட்டை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி-ஜி சாதாரண மனிதபிறவி அல்ல. வளமைமிக்க பாரதத்தை, வளர்ச்சி பாதை நோக்கி பாரதத்தை அடைய கனவு கண்டு இருக்கிறோம். இதனை நிறைவேற்ற மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் நன்மை பெறவேண்டும் என்பதே மோடியின் எண்ணம். அவருடைய குடும்பம், தனக்கென்று ஒன்றும் கிடையாது. இந்த நாட்டு மக்களே அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆகவே இரவு பகலாக நாட்டு மக்களுடைய முன்னேற்றத்துக்காகவே மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
என்று கூறினார்..