தூத்துக்குடியில் மாநகராட்சித் தேர்தலில் நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக வாக்களித்தனர்.
நாடோடி வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டு பகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 52 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது.
இதையெடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு சென்று கீதா மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தது தங்களுக்கு புதிய அனுபவமாக அமைந்ததாக நரிக்குறவர் சமூக பெண்கள் தெரிவித்தனர்.