ஓட்டப்பிடாரம் அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தாலுகா கே.கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் மகன் சுரேஷ் (வயது 27). டிரைவரான இவர் நெல்லை அருகே அளவந்தன்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியில், கோவையில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் அருகே உள்ள தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கயத்தாறை தாண்டி வந்தபோது லாரியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தகரம் உடைந்து உள்ளது. இதை அறிந்த சுரேஷ் தனது சொந்த ஊரான கே.கைலாசபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் லாரியை நிறுத்தினார்.
அங்கு இன்று காலை உடைந்த இரும்பு தகரத்தை லாரியின் பக்கவாட்டில் பொருத்திக் கொண்டு இருந்தபோது, திடீரென அதில் இருந்து தீப்பொறி பறந்து லாரியில் இருந்த பஞ்சு மீது விழுந்தது. இதில் பஞ்சு தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் லாரியும், அதில் இருந்த பஞ்சும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.