திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்த சேலம் பக்தர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க முதல் உதவி மையத்தில் டாக்டர்கள் இல்லாததால் பக்தர்கள் இணை ஆணையர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தங்க பால் ( 64 ) என்ற பெண்ணின் குடும்பத்தினர் 27 பேர் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தனர் கூட்டம் அலை மோதியதால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
பின்னர் தரிசனம் முடித்துவிட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது நவீன் ( 28 ) என்ற பக்தர் மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்திற்கு பக்தர் நவீனை அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் யாரும் இல்லையாம். இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நவீன் உறவினர்கள் விரக்தியடைந்து கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது