தூத்துக்குடி அண்ணா நகரில் நடைபெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவு நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவு செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையடுத்து, இன்று வழக்கத்தை விட அதிகமாக தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வடக்கு மாவட்ட வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிறைவு நிகழ்ச்சியானது தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.