நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவின்போது யாராவது வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு வரும் 19.02.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 டவுன் பஞ்சாயத்துக்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 16 மொபைல் வாகனங்களும், கோவில்பட்டி நகராட்சிக்கு 7 மொபைல் வாகனங்களும், காயல்பட்டினம் நகராட்சிக்கு 3 மொபைல் வாகனங்களும், திருச்செந்தூர் நகராட்சிக்கு 3 மொபைல் வாகனங்களும், ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்துக்கு இரண்டும், ஆத்தூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஏரல் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், எட்டையாபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கழுகுமலை டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கானம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கயத்தார் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், நாசரேத் டவுன் பஞ்சாயத்துக்கு இரண்டும், பெருங்குளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், புதூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், சாயர்புரம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், தென்திருப்பேரை டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், உடன்குடி டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும் மற்றும் விளாத்திகுளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும் ஆக மொத்தம் 48 மொபைல் வாகனங்களின் பொறுப்பாளர்களான 48 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 22 காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் இன்று காலை (17.02.2022) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்காக நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சுமார் 240 வீரர்கள், சிறப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட மைதானத்தில் ஆஜராகி, அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தென்பாகம் குற்ற பிரிவு ரேனியல் ஜேசுபாதம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தேர்தல் அமைதியான முறையில் பொதுமக்கள் அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிக்க ஏதுவாக 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 13 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆகவே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்குமாறும், யாராவது வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.