மாப்பிள்ளையூரணி பகுதியில் லாரி புக்கிங் அலுவலகத்தில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயற்சித்த ஒருவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்று தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் கலா தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திடீரென அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு ஒரு லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் ரேஷன் அரிசி மற்றும் தங்கள் வாகனங்களையும் விட்டு விட்டு தப்ப முயன்றனர்.
அப்போது, தூத்துக்குடி வண்ணார் 1-வது தெருவை சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக் குமார் (22) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அங்கு வைத்து இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 300 மூட்டைகளில் மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்குமாரை கைது செய்தனர். தலைமறைவானவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்