நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் வேட்பு மனு தொடங்கிய நிலையில், தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட கட்சி நிர்வாகிகளிடையே எழும் கடுமையான போட்டியால் தேர்தல் களம் சூடாகி உள்ளது.
நீ யாரா வேனா இருந்துட்டு போ,ஏன் ஏரியால நான் தான் என்று காலரை தூக்கி சொல்லும் பதவி தான் கவுன்சிலர் என்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி நாயகனாக மாறவேண்டும் என்றால் முதலில் கவுன்சிலர் ஆகி அடித்தளம் இட வேண்டும் என்பதுதான் கூடுதல் விஷயம்.
நகர்புற உள்ளாட்சி பெருமையும் கள நிலவரமும் இவ்வாறு இருக்க, தூத்துக்குடி மேயர் பதவியை பிடிக்க ஆளும் கட்சி எதிர்கட்சி இடையே உள்ள போட்டியை தாண்டி, ஆளும் கட்சிக்கு உள்ளேயே கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்படும் போட்டி தான் நகர்புற உள்ளாட்சி தேர்தலையே உற்று நோக்கி கவனிக்க வைக்கிறது.
தூத்துக்குடி திமுக என்றால் பெரியசாமியும் அவரது குடும்பமும் தான் என்ற வரலாறு பிழையில்லாமல் எழுதப்பட்டு வருகிறது. அதில் கொஞ்சம் கருணாநிதி குடும்பம் கனிமொழி வந்தது சிறு திருத்தத்தை தந்தாலும், அதில் எந்த சேதாரமும் இல்லாமல் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் நேர்த்தியாக கொண்டு செல்வதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டில் இருந்து மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி என எந்த தேர்தல் அறிவிப்பு வந்தாலும் தூத்துக்குடியில் திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் பெயர் உச்சரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அந்த உச்சரிப்பு உச்சரிப்போடு சென்று விட்டு போகட்டும் உறுதியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கதையை முடிக்கிறார் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன்.
தற்போது தூத்துக்குடியில் ஆளும்கட்சி மேயர் வேட்பாளர் போட்டியில், கலைஞரின் முரட்டு பக்தராக வர்ணிக்கப்படும் முன்னாள் எம்எல்ஏவும்,மாவட்ட செயலாளராகவும் இருந்து மறைந்த பெரியசாமியின் மகனும் அவரது ஆண் அரசியல் வாரிசான ஜெகன் பெரியசாமியும், திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயலும் களத்தில் இறுதி கட்ட போட்டியாளராக உள்ளனர்.
ஜோயல்
வழக்கறிஞர், இளைஞரணி மாநில நிர்வாகி, துடிப்பானவர், ஓர் கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி, அந்த கட்சியும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கு என்று காட்டிய செயல்வீரர், தூத்துக்குடியில் எல்லோருக்கும் நன்கு பரீட்சயமானவர்.
ஜெகன் பெரியசாமி
பிறந்தது முதலே தனது தந்தை தொடங்கி தற்போது தன்னுடைய அக்கா வரை அனைத்து விதமான அரசியல் நடவடிக்கைகளை உடன் இருந்து நன்கு பார்த்து வளர்ந்து அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் கொண்டவர். கழக உடன் பிறப்புகள் முதல் அனைத்து பொதுமக்கள் மத்தியிலும் நன்கு பரீட்சயமானவர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மேயர் வேட்பாளரில் ஜெகன் பெரியசாமியின் தேர்வுக்கு குடும்ப அரசியல் என்ற கோணத்தில் எதாவது நிராகரிப்பு ஏற்படுமானால், அதனை ஈடுகட்டி, தான் சுட்டி காட்டும் நபரே தலைமையின் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் கீதாஜீவன் தெளிவாக இருக்கிறாராம்!
ஆக மொத்தத்தில், தூத்துக்குடி மேயர் போட்டியில் ஆளும் திமுகவின் தரப்பில் யார் பெயர் உச்சரிக்கப்பட்டாலும், இறுதியில் அதில் வெல்லப்போவது யார் என்பது திமுக வெளியீடும் வேட்பாளர் பட்டியல் மூலம் தெரிந்து விடும்.