தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி - சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வ.உ.சி கல்லூரி அருகில் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் மானுடவியல் பூங்கா தூத்துக்குடி மாநகராட்சி - தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சி.வ.குளம் முள்ளிக்குளம் மீளவிட்டான் குளம் உட்பட மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.