தூத்துக்குடியில் கொலை மிரட்டல் மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த 1ம் தேதி ஒருவரை வழிமறித்து தகாராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தாளமுத்துநகர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (எ) அசோக் (27), அவரது சகோதரர் கண்ணன் (எ) ரமேஷ் கண்ணன் (24), ஆகிய 2 பேரை தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
அதேபோன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த நவ.11ம் தேதி தருவைகுளம் அம்புரோஸ் நகர், அமலதாசன் மகன் அந்தோணி சந்திராயப்பன் (42), என்பவருக்கு சொந்தமான படகில் உள்ள ஜிபிஎஸ் கருவியை திருடிய வழக்கில் வெள்ளப்பட்டி 50 வீடு காலனி, ஜேசுராஜா மகன் பூரண சுரேஷ் (எ) சுரேஷ் (33) என்பவரை தருவைகுளம் போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்விரு வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் அவர்கள் மூவரையும் தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.