• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதா?காரணம் என்ன? டாக்டர்கள் விளக்கம்!

  • Share on

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக எழுந்த புகாரை மறுத்துள்ள டாக்டர்கள், காரணம் என்ன? என்று விளக்கம் அளித்து உள்ளனர்.

இது குறித்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி அருகே உள்ள மணியாச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5-ந் தேதி 3 மாத (13 வாரம்) கர்ப்பிணி பெண் ஒருவர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அவருக்கு கர்ப்பம் கலைந்து உள்ளது. இதனால் சமூக வலைதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் கர்ப்பம் கலைந்ததாக தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து எனது(கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர்) தலைமையிலான மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினோம். விசாரணையில் கர்ப்பிணி பெண் கடந்த 5-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். 8-ந் தேதி அந்த பெண், டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் கர்ப்பத்தை ஸ்கேன் செய்து பார்த்து உள்ளார். அப்போது, கருவளர்ச்சியில் குறைபாடு இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த கரு 7 வாரம் 4 நாட்கள் வளர்ச்சி மட்டுமே இருந்தது. அதே போன்று குழந்தையின் இதய துடிப்பும், அசைவும் ஸ்கேனில் தெரியவில்லை. இதனால் ஸ்கேன் விவரத்தை பார்த்த டாக்டர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். அங்கு 13-ந் தேதி மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி 3 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஆனால் கரு வளர்ச்சி 5 வாரங்கள் குறைவாக உள்ளது. ஆகையால் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கருச்சிதைவுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாக தெரியவந்து உள்ளது. கொரோனா தடுப்பூசியால் கருச்சிதைவு ஏற்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி : குடும்பத்தினர் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் Veg Route காய்கறி shop அறிமுகம்

  • Share on