விளாத்திகுளம் அருகே உயிரிழந்தவருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா(72). கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், கடந்த ஆண்டு மே 20ம் தேதி கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜன.,18ம் தேதி ராஜப்பா பயன்படுத்திய மொபைல் போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.