தூத்துக்குடியில் நாளை (புதன்கிழமை) ரயில் இன்ஜின் சோதனை வேக ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை :
மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூர் வரை 18 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த புதிய ரயில் பாதையில் நாளை (12.01.2022) புதன்கிழமை ரயில் இன்ஜின் சோதனை வேக ஓட்டம் நடைபெற உள்ளது. ஜனவரி 12 அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இரு மார்க்கத்திலும் ரயில் இன்ஜின் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் பொதுமக்களும் புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.