தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கடந்த 03.11.2020 அன்று ஆழ்வாத்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தென்திருப்பேரை தெற்கு கோட்டூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமையாதாஸ் (52) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி (49) இவரது மகன்களான செல்வம் (23) மற்றும் இசக்கி (19) உறவினர்களான ராமசாமி கோனார் மகன் சோமு (எ) சண்முகசுந்தரம் (43), பேச்சிமுத்து மகன் கசமுத்து (66), செல்லத்துரை மகன் சுந்தர் (42) மற்றும் மாரியின் மனைவி சரஸ்வதி (50) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான மாரி, செல்வம் மற்றும் சோமு (எ) சண்முகசுந்தரம் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 31.10.2020 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி (29) என்பவர் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் எபனேசர் பிரசாத் (எ) பிரசாத் (30), விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் (25), தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (27) மற்றும் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்;ந்த பரமசிவன் மகன் காளிராஜ் (எ) கட்டக்காளி (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான எபனேசர் பிரசாத் (எ) பிரசாத், அந்தோணி வினோத், ஆனந்த் மற்றும் காளிராஜ் (எ) கட்டக்காளி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்;க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி அறிக்கையின் அடிப்படையில் 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் 7பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.