விளாத்திகுளத்தில் வீடு புகுந்து நகைகளை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (40), இவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு திறந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.35ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காரத்திகேயன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், காவலர்கள் லிங்கராஜ் மற்றும் குருசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சீனிவாசன் மகன் விவேக்ராஜா (30)என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கார்த்திகேயன் வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்திருக்கும் இடத்தை அறிந்து, கார்த்திகேயன் வெளியே சென்றிருந்த போது வீட்டை சாவியால் திறந்து பீரோவை உடைத்து தங்கநகைகள் மற்றும் ரூபாய் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 11 பவுன் தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் நுழைந்து தங்கநகைகளை திருடியவரை கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.