சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முதியவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டாத்தியிலிருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே நாகபத்திரம் (65), த/பெ. ஐயப்பன், உடையடியூர், பெருங்குளம் என்பவர் நேற்று (09.01.2022) மர்ம நபரால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சாயர்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர் குணசேகரன், முதல் நிலை காவலர்கள் வேம்புராஜ், கைலேயங்கிரி வாசன், ஆனந்தராஜ், முத்துகுமார், நாராயணசாமி, காவலர்கள் ஜான் அந்தோணிராஜ் மற்றும் பட்டவராயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், நட்டாத்தி ஓடை பாலம் அருகிலுள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தங்கராஜ் (எ) தங்கம் (20), த/பெ. பேச்சிமுத்து, கொம்புகாரன்பொட்டல், சாயர்புரம் என்பதும், அவர் மேற்படி கொலையுண்ட நாகபத்ரம் என்பவர் நேற்று (09.01.2022) காலை நட்டாத்தி ஓடைபாலம் அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்த தனது மாடுகளை தேடி வந்தபோது, அங்கு வந்த தங்கராஜ் (எ) தங்கம் என்பவர் நாகபத்ரத்திடம் ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனை கேட்டுள்ளார். நாகபத்ரம் தர மறுக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு தகராறு ஆகியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் (எ) தங்கம் என்பவர் நாகபத்ரம் என்பவரை அவர் வைத்திருந்த அரிவாளால் தாக்கி கொலை செய்து விட்டு, அவருடைய செல்போனையும் பறித்து சென்றுள்ளதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் மேற்படி தங்கராஜ் (எ) தங்கம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளையும், செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை துரிதமாக செயல்பட்டு உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.