தூத்துக்குடி அருகே தனியார் தாது மணல் குடோனில் இருந்து தாதுமணல் பைகளை வேறு இடத்திற்கு கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடற்கரை மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இல்மனைட், கார்னைட் உள்ளிட்ட தாதுமணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் ஆலைகள் செயல்பட அரசு தடை விதித்தது. அரசு தடை விதித்த பிறகும் தாதுமணல் நிறுவனங்கள் தங்கள் குடோனில் இருக்கும் சரக்குகளை வெளியே எடுத்து அனுப்புவது தொடர்கிறது.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கடற்கரையில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 1 டன் எடை கொண்ட 500 க்கும் மேற்பட்ட தாதுமணல் பைகளை லாரியில் ஏற்றி வெளியே கொண்டு செல்ல முயற்சித்தனர்.
தகவல் அறிந்த புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியலாளர் சுகதா ரஹீமா தலைமையில் வருவாய் துறையினர் சென்று லாரி மற்றும் மணல் அள்ளும் இயந்திரம், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆறுமுகநேரி லாரன்ஸ் இருதயராஜ், புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த புலியன், திசையன்விளை சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.