மாணவர்கள் அப்துல்கலாம், காமராஜரை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உரையாற்றினார்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு, புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தும் இடம், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் செயலாளர் செல்வராஜ், நாடார் மகமை துணைச்செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானம், இரு சக்கர வாகன நிறுத்தும் இடம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,
பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது என்பது மிக பெரிய கடினமான பணி அதிலும் இதுபோன்ற பணிகளை செய்வது கூடுதல் சிரமமானவையாக இருந்தாலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக காரப்பேட்டை நாடார் பள்ளி இயங்கி வருகிறது.
முன்னாள் தலைவர் காமராஜர் திறந்து வைத்த பள்ளி என்ற பெருமையோடு ஆசிரியர்கள் குடும்பத்தை மறந்து விருப்பு வெறுப்பின்றி மாணவர்கள் சிறந்து விளங்க பல அறிவுரைகளோடு கண்டித்து மாணவ செல்வங்களை திறமை மிகு மாணவர்களாக வழி நடத்தி செல்கின்றனர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கேற்ப குருவான ஆசிரியர்களின் பணி முக்கியமான பணியாகும்.
பெருந்தலைவர் காமராஜர் படிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் சில குக்கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பள்ளிகளை அமைத்து படிப்பறிவு இல்லாத மாநிலமாக திகழவேண்டும் என்று பள்ளிகளை உருவாக்கி வாழ்ந்து மறைந்த தலைவராக இன்னும் தமிழகத்தில் எல்லா தரப்பினரிடம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் காமராஜர்.
அதேபோல் அப்துல்கலாம் சிறிய கிராமத்தில் பிறந்து படிக்க வசதியின்றி படித்து ஜனாதிபதி பதவியில் அமர்ந்தவர், இரு தலைவர்களையும் பின்பற்றி மாணவர்கள் பயின்றால் வெற்றி நிச்சயம்
படிக்கின்ற பருவத்தில் நல்ல முறையில் படித்தால் கல்லூரியின் வாசல்கள் உங்களை திறந்து வரவேற்கும் அந்தநிலையை பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உருவாக்க வேண்டும்.
இப்பள்ளியில், விளாயாட்டு, படிப்பு என அனைத்து கட்டமைப்புகளும் உள்ளது. விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று இந்த பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகாசிநாடார் உறவின் முறை பொருளார் நரேன் தர்மராஜ், விருதுநகர் நாடார் தர்மபரிபாலன் சங்க தலைவர் பாலமுருகன், நாடார் மகமை செயலாளர் சந்திரசேகர், மகமை துவக்க பள்ளி செயலாளர்கள் ராஜாமணி, சந்தனகுமார், மகமை துணைத்தலைவர் காமராஜ், சுற்றுவட்டார லாரி உரிமையாளர் சங்க தலைவர் தனசிங், தொழிலதிபர் செல்வராஜ், கச்சேரி தளவாய்புரம் சங்க தலைவர் கணேசன், நிர்வாகிகள் பெத்துபாண்டியன், முருகேசன், தினகரன், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயலாளர் சங்கரேஸ்வரன், முன்னாள் செயலாளர் பெத்துராஜ், மற்றும் ராஜேந்திரபிரபு, பட்டுராஜா, வேல்சாமி, மாணிக்கவேல், உத்திரபாண்டி, லிங்கராஜ், மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.