தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் சந்திரசேகர். இவர் இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்தொழில் செய்துவந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 ஆண் மற்றும் 1 பெண் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீனவர் மிக்கேல் சந்திரசேகர் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 23- 12- 2021 அன்று விளாத்திகுளம் அருகே தருவைக்குளம் கடற்பகுதியிலிருந்து விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கேரள மாநிலம் - கொச்சின் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று (06.01.2022) மாலை 6 மணியளவில், தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில், கொச்சின் இந்தியப்பெருங்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த மிக்கேல் சந்திரசேகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள் இதுகுறித்து தருவைகுளம் கடலோர காவல் படையினருக்கு வாக்கிடாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மீன்பிடிக்கச் சென்ற மிக்கேல் சந்திரசேகர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது படகில் மயங்கி உயிரிழந்ததை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மேலும் மீனவர் மிக்கேல் சந்திரசேகர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சக மீனவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து தருவைக்குளம் கடலோர காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மைக்கேல் சந்திரசேகரின் உடல் அவரது சொந்த ஊரான பெரியசாமிபுரம் கிராமத்திற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பெரியசாமிபுரம் கிராம மக்கள் சார்பில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த மிக்கேல் சந்திரசேகரின் உடலை விரைந்து அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் மிக்கேல் சந்திரசேகர் படகில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது.