தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் தென்திருப்பேரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஆகாய தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (07.01.2022) வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உடன் இருந்தார்.
பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பொதுவாக நீர் வழிகளை அடைத்துக்கொண்டு வளரக்கூடிய ஆகாய தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தார்கள். அதனடிப்படையில் சுற்றுப்புற சூழலுக்கும், நீர் வளங்களுக்கும் எதிராக இருக்கக்கூடிய ஆகாய தாமரைகளை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆகாய தாமரையை காய வைத்து அதன் மூலம் கூடைகள் மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்குவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பயிற்சியாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.
ஆகாய தாமரை வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய பொருட்களாக இருந்தது. தற்பொழுது அதனை பெண்களுக்கு வருமானம் ஈட்டிதரக்கூடிய பொருட்களாக மாற்றி தருவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக மகளிர் திட்டத்தில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு ஆகாய தாமரையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அழகாக மாற்றி, நீண்ட உழைப்புள்ள பொருட்களாக தயார் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்ய முடியும். மேலும் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு அயல்நாட்டிற்கு இணையாக நமது தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் மிக அழகான பொருட்கள் தயார் செய்து ஆகாய தாமரையில் இருந்து புதுவிதமாக பொருட்களை தயார் செய்து அயல்நாட்டிற்கு முன்னோடியாக திகழும் அளவிற்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்யும் அளவிற்கு தங்களது திறமையை வளர்த்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி என்றால் ஆகாய தாமரையின் மூலம் நேர்த்தியாக அழகாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக வடிவமைப்பார்கள் என்று உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும். இந்த பயிற்சி 6 மாத காலம் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளப்படும் நபர்களுக்கு 26 வகையான உபகரணங்கள் 60 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று நீங்கள் நான்கு நபர்களுக்கு பயிற்சி கற்றுக்கொடுக்கும் அளவிற்கு உங்கள் திறமைகளை உயர்த்திக்கொண்டு வாழ்வாதாரம் மற்றும் வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜனஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கருப்பசாமி, ஹைதராபாத் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சி வழங்குபவர்கள் பீனாராவ், நபார்டு மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், முக்கிய பிரமுகர்கள் நவீன்குமார், ராமஜெயம், செங்குளி ரமேஷ், ஜெசிபொன்ராணி, சதீஸ், சோபியா மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.