தூத்துக்குடியில் கொரோனா விதிமுறை மீறல் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கை ஈடுபட்டு பொது போக்குவரத்து வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்தான பஸ், ரயில் களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நடைமுறையை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் மோட்டார் ஆய்வாளர்கள் குமார், தனபாலன் ஆகியோர் தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்துகளை அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிமீறிய வாகனங்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தினர்.