தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களுக்கு சிலை இருக்கும் அதே இடத்தில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும்- தமிழக மீனவ மக்கள் கட்சி வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ஆவார். ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், அய்ந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில், ஜாதிமத பேதமின்றி அம்மாவட்ட அடித்தள மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்லபல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.
ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, அவருடைய பிறந்த நாளில் அன்னாரின் புகழுக்கு மென்மேலும் பெருமைச் சேர்க்கின்ற வகையில் தூத்துக்குடி மாநகரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக மீனவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோல்டன் பரதர் தெரிவித்ததாவது;
குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது தூத்துக்குடி மக்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பரத குல மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது தூத்துக்குடி மாநகரின் மத்தியில் சிலை அமைந்திருக்கும் அதே இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
அதை விடுத்து தூத்துக்குடி மாநகரின் ஒதுக்கு புறத்திலோ?அல்லது வல்லநாட்டிலோ? இடத்தை தேர்வு செய்ய முயற்சி செய்வது ஏற்புடையதல்ல என கூறிய அவர், உடனடியாக தமிழக அரசு இதை பரிசீலனை செய்து மணிமண்டபம் அமைப்பதற்க்கான வேலையை துவங்கி அடிக்கல் நாட்டிட வேண்டும்.
மணிமண்டபம் இடம் மாற்றப்படுமானால் ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களின் சார்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.