தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் 2 லட்சம் பனை விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகள் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கும், பஞ்சாயத்துக்கும் 100 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. பனை சாகுபடியில் சுய உதவி குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியோர் ஈடுபடுவர். பனை விதையை ஏரிகளின் வரப்பு, வாய்க்கால் வரப்பு, சாலை ஓரங்கள், அரசு புறம்போக்குப் பகுதிகளில் நடவு செய்ய கிராம பஞ்சாயத்துக்கள் பயன்படுத்தப்படும்.
பனை விதையானது மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையினால் கொள்முதல் செய்யப்பட்டு வட்டாரங்களுக்கு இலக்கின்படி வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதை வழங்கப்படும். உள்ளூர் தேவைக்கு ஏற்ப கிராம பஞ்சாயத்துக்களுக்கு பனை விதைகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.
இரண்டு விதைக் குழிகளுக்கு இடையில் 3 மீட்டர் இடைவெளி விட்டு பொருத்தமான ஈரப்பதத்துடன் பனை விதைகளை நேரடியாக குழிகளில் விதைக்க வேண்டும். விதைப்பு ஆழமானது மண்ணின் தன்மைக்கேற்ப 30 - 40 செ.மீ இருக்க வேண்டும். குழி தோண்டுதல் மற்றும் பனை விதைப்பு 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களால் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும். பனை விதைகள் விநியோகப் பதிவேடானது வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரால் பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் விவசாயின் விவரங்கள், பனை விதை வழங்கப்பட்ட பஞ்சாயத்தின் பெயர், சர்வே எண் விவரங்கள் ஆகியவை பதியப்பட வேண்டும். சர்வே எண் விவரங்களுடன் இணைய வழி பதிவிட வேண்டும்.
ஆண்டுக்கு இருமுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வார். எனவே பனை விதை தேவைப்படும் விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.