தூத்துக்குடி - கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி - சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய இரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வேயிடம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மதுரை கோட்ட தென்னக இரயில்வே மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் :
தூத்துக்குடி - கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் (226699-22 670) இரயிலாக, நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் இரயிலுடன் மணியாச்சியில் இணைக்கப்பட்டு இரயில் சேவை நடைபெற்று வந்தது. அதுபோல, தூத்துக்குடி - சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் (16129-16130) இரயில் சேவையும் நடைபெற்று வந்தது. இதனால் தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் பெருமளவில் பயன் பெற்று வந்தனர்.
தற்போது தூத்துக்குடி - கோவை லிங்க் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகளையும் நிறுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளது. பொதுமக்களுக்கு பெரிதும் பயன் அளித்து வரும் இந்த இரண்டு இரயில் சேவைகளை ரத்து செய்யாமல் மீண்டும் தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாத பட்சத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.