தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 250 மாணவர்களுக்கு அதிகமாக படிக்க கூடிய 313 பள்ளிக்கூடங்களும், 100 முதல் 250 மாணவர்கள் படிக்க கூடிய 316 பள்ளிக்கூடங்களும், 100 மாணவர்களுக்கு குறைவாக படிக்க கூடிய 1240 பள்ளிக்கூடங்களும் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் வரும் காலத்தில் பள்ளி கட்டிடங்கள், சுவர்கள் இடிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக தாலுகா மற்றும் மாநகராட்சி மண்டலம் வாரியாக பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பேரூராட்சி, மாநகராட்சி பொறியாளர்கள், கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவினர் கட்டிடத்தின் உறுதித்தன்மை, பெரிய தனியார் பள்ளிகளாக இருந்தால் 1.12.2021-க்கு பிறகு அரசு சான்றிதழ் பெற்ற கட்டிட பொறியாள்களிடம் பெறப்பட்ட கட்டிட உறுதிச்சான்று, கழிப்பிடம் மற்றும் பொது சுகாதார வசதி, மின்சாதனங்கள் மற்றும் மின் அமைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதே போன்று இயற்கையாக பாதிப்பு தரக்கூடிய நீர்நிலைகள் ஏதும் அருகில் உள்ளதா, உறுதியற்ற தன்மையுடன் அல்லது மோசமான நிலையில் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டால், சிவப்பு டேப் மூலம் அதனை சீல் செய்து, மாணவர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும், உடனடியாக இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் மாற்று கட்டிடம் கண்டறிந்து வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதன்படி 21 பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளும், 4 பள்ளிக்கூடங்களில் கழிப்பறையும், 5 பள்ளிக்கூடங்களில் சமையல் அறையும் பழுதடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த கட்டிடங்களை இடித்து அகற்றவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வித்துறையில் போதிய நிதி இல்லாத நிலையில் பிற துறைகளில் இருந்து நிதியை பெற்றும், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்தும் அடுத்த கல்வியாண்டுக்குள் கட்டிடங்களை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.