குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேடு குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் சுமார் 2 கோடி அளவிற்கு நகைகள் மற்றும் பல கோடி ரூபாய்க்கான வைப்பு தொகைகளை வங்கியின் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் மோசடி செய்து கையாடல் செய்துள்ளார். இதனால் குரும்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலம் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கியிலிருந்து நகைகள் திரும்ப வழங்காமல் இருந்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.