மாப்பிள்ளையூரணி பஞ்., அழகாபுரியில் உள்ள சுமார் 60 குடியிருப்புகளுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தாலுகா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அழகாபுரியில் சர்வே எண் 186, 186/59-A என்னுமிடத்தில் உள்ள சுமார் 60 குடியிருப்புகளுக்கு இலவச பட்டா வழங்க கோரியும், போலி பட்டாவை ரத்து செய்யக்கோரியும், போலி பட்டா வழங்கிய அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊர் பொதுமக்கள் சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இது தொடர்பான மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் அர்ஜுனன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலமுருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் பானு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இசக்கியம்மாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்ட அழகாபுரி மக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.