எட்டயபுரம் அருகே தனியார் நிறுவனம் சோலார் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி ஆளும் கட்சி எம்எல்ஏ மிரட்டல் விட்டு, அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் வசைபாடி தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, எட்டயபுரம் அருகே புங்கவர்நத்தம், ஆத்திக்கிணறு, முள்ளுப்பட்டி, சோழபுரம் ஈராட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சோலார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசிடம் அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கியுள்ளது எனவும், நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது மட்டுமின்றி சேதப்படுத்தி உள்ளதாகவும் இதனால் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொம்மையாபுரம்- போடுபட்டிக்கு இடையே உள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சோலார் அமைக்கும் பணிகளை நிறுத்த கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்று சோலார் அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சோலார் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதே வேளையில், பணி நடக்கு இடத்திற்குள் புகுந்த விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்,
"விளையாடுறீயா? நீதானய்யா பிஆர்ஓ? அடிச்சு கட்டித் இழுத்துட்டு போயிருவேன் உன்னையே. திருட்டு (.....அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை ) இந்த ஊர்ல நீ யார்? ரவுடியா பண்ணிட்டு இருக்க? அடிச்சி எல்லாத்தையும் ஒடச்சிடுவேன். வண்டிய எடுத்து வெளியே போயா. ஏன்டா திருட்டு ( ......அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை ) எல்லாருக்கும் ஒரு ரெஸ்பான்ஸ்சிபிலிட்டி இருக்கு. நான் என்ன ( ......அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை ) வர்றேன்? ( ......அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை ) ஊரை சுற்றி அடைச்சு கிடைச்சு எல்லாத்தையும் பிடுங்கி எறிந்து விடுவேன். என்னய்யா பர்மிஷன் மயிறு நீ வாங்கி இருக்க? ஏய் இதுல யாருப்பா சொந்த வண்டி வச்சிருக்கீங்க? சொந்த வண்டி இருந்தா எல்லாத்தையும் வெளிய எடுத்துட்டு போயிருப்பா. இந்த சூப்பர்வைசர் இன்ஜினியர் இருப்பாங்களா, எங்க அவங்கப்பா? அடி கொடுத்தேன் வச்சுக்கோ பல்லை உடைச்சிடுவேன். பெர்மிஷன் வாங்காம என்னடா நீ எங்க வேலை பார்க்க? அதிகாரி வச்சு எல்லாத்தையும் சீஸ் பண்ணிருவேன்.
எல்லாம் எடுத்துட்டு வெளியே போ, இங்கு யாரும் வேலைக்கு வர கூடாது எல்லாரும் போங்க பிரச்சனை வேற மாறி போகும். என ஆளும் கட்சி திமுக எம்எல்ஏ வான மார்க்கண்டேயன் மிரட்டல் விட்டு, அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் வசைபாடி தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கும் சம்பவ வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் திமுகவினரின் அடாவடி, அராஜக மற்றும் அதிகார மிரட்டலால் தான் 10 ஆண்டுகளாக தமிழக மக்கள் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால், தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறையால் மீண்டும் தமிழக மக்கள் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அழகுபார்த்து வரும் வேலையில், மீண்டும் பழைய படி திமுக தனது அடாவடித்தனத்தனத்தை தலைதூக்குகிறதோ என்ற நினைப்பு, மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் மிரட்டல் செயலால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தனது தொகுதியில் நடக்கும் இந்த தனியார் நிறுவன சோலார் பணிக்காகக்காக, தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் தனக்கு வர வேண்டியது வந்து சேராமல் போனதுதான் , மார்க்கண்டேயன் எம்எல்ஏ விற்கான இந்த கோபம் என காரணம் சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்!
விதி மீறலோ, பாதிப்போ எதுவானாலும் சட்டத்திற்குள் உட்பட்டு தீர்வு கான முற்படுவது தான் ஜனநாயக நடைமுறை. ஆனால், ஒரு மக்கள் பிரதிநிதியே இவ்வாறு அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடும் அராஜக சம்பவம், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் சம்பவத்திற்கு சமமாகும். இது போன்ற செயலுக்கு தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.