குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அக்காளை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்த மாப்பிள்ளை சாமி மகன் கட்டபொம்மன் துரை ( வயது 44 ) லாரி டிரைவர். இவரது மனைவி சக்கம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவருடைய அக்கா ஈஸ்வரி மகள் உமா ரஞ்சனியை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மன் துரை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கட்டபொம்மன் துரைக்கும் உமா ரஞ்சனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உமா ரஞ்சனி கோபித்துக்கொண்டு தாய்வீடான பாஞ்சாலங்குறிச்சி இந்திராநகருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் ஈஸ்வரியும் உமா ரஞ்சனியும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டபொம்மன் துரை வீட்டு அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டபொம்மன் துரை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி மற்றும் அக்காள் ஈஸ்வரியை வெட்டியுள்ளார். இதில் இரண்டு பேரும் காயமடைந்தனர். இரண்டு பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து கட்டபொம்மன்துரையை கைது செய்தனர்.