பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால விநாயகர் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை இடமாற்றம் செய்ய இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால விநாயகர் கோவில் தெரு பிரதான சாலையில் நூறாண்டு காலமாக பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. தற்போது கார்த்திகை மார்கழி மாதம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து வழிபாடு செய்வது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாலவிநாயகர் கோவிலுக்கு தினமும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மேற்படி கோவில் முன்பு தமிழ்நாடு அரசு மொபைல் மீன் வண்டி நிரந்தரமாகவும் மற்ற மீன் வியாபாரிகள் கோவில் சுற்றுச்சுவர் முன்பும் மற்றும் இரு புறமும் பொது போக்குவரத்துக்கு பகுதியில் தற்காலிகமாகவும் மீன் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும், மீன வியாபாரிகள் மீன் கடை அமைத்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதே போல் மீன் கழிவுகளை அருகில் உள்ள சாக்கடை மற்றும் சாலை ஓரத்தில் கொட்டி வருகிறார்கள். இப்பகுதியில் பள்ளிகளும் அமைந்துள்ளது. மேற்படி பகுதியை தாண்டி பொதுமக்கள் காய்கறி மார்க்கெட், நீதிமன்றம், மருந்தகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அந்த சாலையைப் பயன்படுத்தும் அவசியம் உள்ளதால், பக்தர்களோடு பொதுமக்களுக்கும் மிகுந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
ஆகவே, பால விநாயகர் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து தர கேட்டுக் கொள்ளப்படுகிறது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.