கிரில் தொழிலில் உள்ள குறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக கிரில் தயாரிப்பாளர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் தொழிலில் மூலப் பொருளான இரும்பின் விலை கிட்டத்தட்ட 100% விலை உயர்ந்துள்ளதால் எங்கள் தொழில் பல இடங்களில் மூடப்பட்டும், தொழிலாளர்கள் வாழ்விழந்தும் உள்ளார்கள். அவர்களையும், எங்கள் தொழிலையும் காக்க இரும்பு விலையை குறைக்க ஆவண செய்ய வேண்டும்.
பணி செய்யும் போது எதிர்பாராத விபத்துக்களால் உயிரிழக்கும் எங்கள் தொழிலாளிகளுக்கு குடும்ப நல நிதியாக ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். குறுந் தொழிலாக செய்கின்ற எங்கள் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி போடப்படுவதை 5% குறைக்க ஆவண செய்ய வேண்டும்.
எங்கள் தொழிலுக்கு 7.5 கிலோ வாட் வரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். எங்கள் தொழில் பற்றிய பாடங்களை தொழில் பயிற்சி பள்ளிகளில் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இதில், மாவட்ட தலைவர் குமார் மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து மாவட்ட செயலாளர் இருதயராஜ் மஸ்கரனாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழக கிரில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.