தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு ஒளி பரப்புவதற்காக சம்பந்தப்பட்ட சந்தாதாரர் ஒவ்வொருவரிடமும் 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை மாதம் தோறும் வசூல் செய்த சந்தா தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகையினை 10 ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகையினை செலுத்திட பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமும் பத்திரிக்கை செய்தி மூலமும் அறிவுறுத்தப் பட்டது.
மேலும் 19.11.2021 மற்றும் 22.11.2021 நாளிட்ட பதிவுத் தபால் மூலமும் இந்த நிலுவைத் தொகையினை 15 தினங்களில் செலுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நாள் வரை அவர்கள் நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். எனவே இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் நிலுவைத் தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.