குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர், தற்போது கழிவு நீராக உருமாறி சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகை செய்யும் சூழ்நிலையில் அதனை அப்புற படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சலால் ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகமாகிறது. இதனால் மாநகராட்சி சார்பில் ஆப்செண்ட் ஆகும் மாணவர்கள் விவரங்களை சேகரித்து, அதனடிப்படையில் காரணம் குறித்த நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் வித்யா தலைமையில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் குழுவினர் "கொசு கடிக்காமல் உடம்பை பார்த்துக் கொள்ளவேண்டும், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னர் விளையாடச் சென்றால் பேன்ட் அணிந்து செல்லவேண்டும், காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயம் டாக்டரிடம் செல்ல வேண்டும்" என்ற அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஆனால், கடந்த 25 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனை மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், இன்னும் ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இருபது நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சுற்றி தேங்கியிருக்கும் மழை நீர் அகற்றப்படாமல் இருப்பதால் மழைநீரானது தற்போது கழிவு நீராக உருமாறி, கொசுக்கள் உற்பத்தி ஆகி சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்துவது ஒரு புறம் இருக்க, மாணவர்கள் வீட்டுக்கு வந்தா, சாக்கடையாக உருமாறிய மழைநீரால் உண்டாகும் சுகாதார சீர் கேட்டில் சிக்காமல் இருக்க எப்ப வேலை செய்வீங்க? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.