தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 46). இவர் தூத்துக்குடி நோக்கி இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தாா். வாலசமுத்திரம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் காயம் அடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவர், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு டாக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.