தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (16.12.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் உத்தரவிட்டும் உரக் கடைகளில் உரம் விலை அதிகமாகத்தான் விற்கிறார்கள் எந்த கடையிலும் விலை விபரம், இருப்பு விபரம் இல்லை. பெயரளவுக்கு ஐந்து கடைகள் மீது வேளாண்மை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அந்தக் கடையின் பெயரை கூட வெளியிடவில்லை. நடவடிக்கை எடுத்த கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது .
உடனே, உர விற்பனைக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டது. அந்த கடையில் பூச்சி மருந்து விற்பனை நடப்பதால் கடை திறந்து இருக்கிறது என்று தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
தவறு செய்தவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்பது செய்ய தவறுக்கான தண்டனையாகவும், இனி அந்த தவறை செய்யக்கூடாது என்ற எச்செரிக்கையை எடுத்துரைக்கும் விதமாக இருக்க வேண்டும்.
ஆனால், இங்கு நான் அடிப்பது போல் அடிப்பேன் நீ அழுவது போல் நடித்துக் கொள் என்பது போல். உர விற்பனையில் அரசின் உத்தரவை மீறியதற்கு தண்டனையாக நீ இனி உரத்தை விற்பனை செய்ய தடை. ஆனால் கடையை திறந்து வைத்துக்கொள்ள அனுமதி என்ற வேளாண்மை அதிகாரியின் வினோத நடவடிக்கை விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை கண்ட விவசாயிகள் நல்லா எடுக்குறாங்கப்ப ஆபிசர்கள் நடவடிக்கை! என்று நொந்து கொண்டனர்.
ஆனால், அந்த வினோத நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு, தூத்துக்குடி ஆட்சியர் "பூச்சி மருந்து விற்பனை செய்வது போல் உரத்தையும் விற்பனை செய்வார்கள்" இதனால் அந்த கடைக்கு சீல் வைத்து பூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.