தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 240 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 240 முகாம்கள் நடத்தப்படும்.
முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினைசரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு அறுவை சிசிக்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
டிசம்பர் 2021-ம் மாதம் முதல் மார்ச் 2022-ம் மாதம் முடிய கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.