தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீா்வரிசைகளுடன் கூடிய இலவச திருமணத்தை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் நடத்தி வைத்தார்.
தூத்துக்குடி சில்வா்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில், ஆண்டுதோறும் நன்கொடையாளா்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அதனடிபடையில், இன்று காலை 6 ஜோடிகளை தேர்வு செய்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவர்கள் தமிழகத்தின் திருவள்ளூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளாவர்
சுயம்வரம் மூலம் தேர்வு செய்யப்பட்ட சிலுவை அந்தோணி வளன்- செல்வ புனிதா, லிங்கதுரை- இரமணி, யோவான்-சசிகலா, கஞ்சையா- உமா மகேஸ்வரி, கற்பக ராஜ்-ரதி, அந்தோணி ராஜ்- ஷிலாவசந்த குமாரி ஆகிய 6 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், லூசியா இல்ல இயக்குநா் ஜான் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்கதாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, கட்டில், மெத்தை, பீரோ, இன்டக்சன் அடுப்பு, வீட்டு உபயோக பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரசி போன்ற சீதன பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், அருட்பணியாளர்கள், அருட்சகோதர்கள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.