தூத்துக்குடியில் மீனவ குடியிருப்பு அருகே கரை ஒதுங்கிய மிதவை கப்பலால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு, கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக `பார்ஜ்' எனப்படும் சிறிய வகை மிதவை கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மிதவை கப்பலில் சரக்குகள் ஏற்றப்பட்டு இழுவை கப்பல் மூலம் இழுத்து செல்லப்படும். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இந்த `பார்ஜ்'கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சரக்குகளை ஏற்றி செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே ஒரு மிதவை கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த மிதவை கப்பல் நேற்று காலையில் திடீரென காற்றின் வேகத்தில் கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது. பின்னர் இனிகோநகர் கடற்கரை பகுதியில் வந்து மோதி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மிதவை கப்பல் கடற்கரை நோக்கி வந்ததால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் இழுத்து நிறுத்தினர். இதனால் படகுகள் சேதம் இன்றி தப்பின.
மிதவை கப்பல் கரை ஒதுங்கியதால், அந்த பகுதி மக்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். தொடர்ந்து கரை ஒதுங்கிய மிதவை கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.