தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சினி காலனி பகுதியில் சாரதி (எ) பார்த்தசாரதி (35), த/பெ. கண்ணன், செல்சினி காலனி, என்பவரை கடந்த 23.11.2021 அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் மாரிமுத்து (26), த/பெ. மூக்காண்டி, செல்சினி காலனி மற்றும் அவரது உறவினரான கார்த்திக் ராஜா (21), த/பெ. ஆதிலிங்கம் வள்ளிநாயகபுரம், தூத்துக்குடி ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் மாரிமுத்து மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜூம்,
கடந்த 22.11.2021 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் பப்பரப்பள்ளி சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் சதாம் உசேன் (எ) சிலிண்டர் (30), த/பெ. அப்துல் ரசாக், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, காயல்பட்டினம் என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சதாம் உசேன் (எ) சிலிண்டர் என்பவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்திலும்,
கடந்த 26.11.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மார்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற வழக்கில் இசக்கிராஜா (31), த/பெ. சண்முகம், ராமையன்பட்டி, திருநெல்வேலி மாவட்டம், பிரபாகரன் (35), த/பெ. பரமசிவன், தாழையூத்து, திருநெல்வேலி, கதிரேசன் (25), த/பெ. பிச்சைபழம், ராஜகோபாலபுரம், நாங்குநேரி, திருநெல்வேலி மற்றும் பிரசாந்த் (25), த/பெ. கல்யாணம், திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிய 4 பேரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய நபர்களான இசக்கிராஜா மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் 1) மாரிமுத்து, த/பெ. மூக்காண்டி, செல்சினி காலனி, 2) கார்த்திக் ராஜா, த/பெ. ஆதிலிங்கம் வள்ளிநாயகபுரம், தூத்துக்குடி, 3) சதாம் உசேன் (எ) சிலிண்டர், த/பெ. அப்துல் ரசாக், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, காயல்பட்டினம், 4) இசக்கிராஜா, த/பெ. சண்முகம், ராமையன்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் 5) பிரபாகரன், த/பெ. பரமசிவன், தாழையூத்து, திருநெல்வேலி ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி நபர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகளில் ஈடுபட்ட 22 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 20 பேர் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 182 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.