கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜகவினர் வாயில் கறுப்புத்துணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மே 7-ம் தேதி திமுக அரசுபொறுப்பேற்ற பிறகு முகநூல், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திமுக மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனனர். ஒருசிலர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி பலரும் கைது செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது, ஆளும்கட்சியாக மாறிவிட்டால், விமர்சிப்பவர்களை கைது செய்வதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக, பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையானது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாநகரக் காவல்துறை அவரைக் கைதுசெய்திருக்கிறது.
அரசின் இது போன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து பாஜக தமிழகம் முழுவதும் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்பாட்டம் நடத்த மாநில பாஜக தலைமை உத்தரவிட்டதை யடுத்து, இன்று (12.12.2021 ) தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கறுப்புத்துணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட தலைவர் பால்ராஜ், ஒபிசி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் வி.எஸ்.ஆர் பிரபு, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தொழில் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுயதர், மண்டல தலைவர்கள் கனகராஜ், சந்தணக்குமார், முத்துகிருஷ்ணன், பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் தங்கம், மாரியம்மாள், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சுதா, பிற மொழி பிரிவு தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷா தேவி, ரஞ்சனா, மண்டல பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கனி, முத்துபெரியநாயகம், ஐடிவிங் காளிராஜா, அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.