தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (I.M.E.I) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02.07.2021 அன்று 60 செல்போன்களும், 24.08.2021 அன்று 70 செல்போன்களும் அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று ஒப்படைக்கப்படும் 100 செல்போன்கள் சேர்த்து மொத்தம் 453 செல்போன்கள் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகும் தொடர்ந்த சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (I.M.E.I) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்து இன்று (08.12.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு பேசுகையில் :
இந்த ஒரு வருட காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து காணாமல் போன ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள 453 செல்போன்கள் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றம், இணைய தளம், ஆன் லைன் மோசடி, சமூக வலைதளங்களின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலோ அல்லது தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களிலோ புகார் அளித்தால் தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செல்போன் காணாமல் போனவர்கள் பலர், அதில் புகைப்படங்கள் உள்ளது, பாஸ்வேர்டு பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறுகின்றனர். ஆகவே பொதுமக்களுக்கு சொல்வது என்னவென்றால் பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவல்களை செல்போனில் சேமித்து வைக்காதீர்கள், செல்போனில் ஸ்கீரீன் லாக் மற்றும் பேட்டர்ன் லாக் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும். செல்போன் மூலம் ஆன் லைன் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது, அதில் அடையாளம் தெரியாத அந்நிய நபர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்யாதீர்கள். இந்த காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில் :
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. சைபர் கிரைம் எனப்படும் கணினி வழி குற்றங்கள், ஆன்லைன், இணையவழி குற்றங்கள், சமூக வலைதள குறறங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை பற்றி புகார் அளிக்க காவல் நிலையம் மட்டுமல்ல, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் நேரடியாக புகார் அளிக்கலாம். சமூக ஊடகங்கங்களில் அவதூறான செய்திகள் பரப்புபவர்கள் மீது புகார் அளிக்கவும், இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுபவர்கள் மீதும் இக்காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது சுயவிவரங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நடைபெறும் குற்றங்களுக்கு இங்கு புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக வளைதளங்களை பயன்படுத்துவதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் சம்மந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் சுதாகர் உட்பட காவல்துறையினர் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.