• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், இன்று (02.12.2020) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ், உடனிருந்தார்.

ஏரல் வட்டம் முக்காணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் செய்யபட்டுள்ள வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார் ஆர்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.

அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து ஆத்தூர் பேருராட்சியில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளையும் பேருராட்சி சமுதாய கூடத்தினையும் ஆய்வு செய்தார். 

சமுதாய கூடத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உணவு சமைக்க செய்யப்பட்டுள்ள வசதிகளையும், சமைக்க தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து புன்னைக்காயல் தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமினை முதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.

ஊராட்சி தலைவர் மற்றும் அலுவலரிடம் பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்து தண்டோரா மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விட வேண்டும் எனவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தவும் உத்தரவிட்டார். 

மேலும் மண்டபத்தில் பொதுமக்கள் தங்க வைக்கும்போது அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து காயல்பட்டிணம் நகராட்சி கொம்புத்துறையில் உள்ள பல்நோக்கு புகலிடம் மையத்தினை ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். 

நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் பல்நோக்கு புகலிடத்தில் ஜன்னல், கபோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறிய பழுதுகளை உடனடியாக சரிசெய்திடவும், அருகில் உள்ள கிராம பகுதியில் எத்தனை குடும்பங்கள் உள்ளது, மழை புயல் காரணமாக எத்தனை குடும்பங்கள் பாதிப்பு ஏற்படலாம் என்பதை கணக்கெடுத்து அனைத்து பொதுமக்களையும் இங்கே அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு புயல் குறித்த விபரங்களை தண்டோரா மூலம் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அப்துல்காசிம், ஏரல் வட்டாட்சியர் இசக்கி, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷர்ஷ்சிங், இ.கா.ப., வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ், காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் சுகந்தி, பொறியாளர் ராஜேந்திரன், பணி ஆய்வாளர் சுதாகர், ஆத்தூர் பேருராட்சி செயல் அலுவலர் ரெங்கசாமி, புன்னைக்காயல் ஊராட்சி தலைவர் சோபியா, துணைத்தலைவர் மிக்கேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

புரெவி புயல் : தூத்துக்குடி - சென்னை விமானங்கள் ரத்து!

அவசரகால கட்டுப்பாட்டு அறையில்; புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு

  • Share on